கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனக் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது வாடிக்கையாகிவிட்டது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைக் காவல் துறையினர் கண்டறிந்து, சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன்(50), அவரது மகன் ஜெகதீஷ்(24)-வுடன் இணைந்து வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர். குக்கரில் சாராயம் காய்ச்சுவது எப்படி என்று யூடியூபில் பார்த்துத் தயாரித்து குடித்தது மட்டுமின்றி மீதமுள்ள சாராயத்தை விற்பனை செய்திட 8 பாட்டில் மற்றும் ஒன்றரை லிட்டர் அளவு கொண்ட கள்ளச்சாராயத்தைப் பாட்டிலில் நிரப்புவதற்காக வைத்திருந்தனர்.