கரூர்: கடவூர் தாலுகா வீரணம்பட்டி பகுதியில் உள்ள பட்டியலயின மக்கள் கடந்த ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்ற வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில், கோயிலுக்குள் சென்று உள்ளே வழிபடக் கூடாது என தடுத்த விவகாரம் தற்போது தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியலினத்தவர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கோயில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில், அதேப் போன்ற ஒரு சம்பவம் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டியில் நடைபெற்ற காளியம்மன் திருவிழாவில் நடைபெற்று முடிந்து உள்ளது. பலக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என மற்றொரு தரப்பினர் தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
மேலும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது கோயிலுக்குள் பட்டியலின மக்களை வழிபட தடுத்ததாக உள்ளிட்ட புகார் குறித்து கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தாரான பட்டியலின இளைஞர் வீட்டிற்கு 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் காளியம்மன் கோயிலை சீல் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்த போது, அவரை சிறைப் பிடித்து மண்ணை வாரி தூற்றி போராட்டம் நடத்தியதாக 21 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வீரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றபோது, அவரை தடுத்து நிறுத்தி சாதிப் பெயரை சொல்லித் திட்டியதாக வழங்கப்பட்ட புகாரில் இருவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனடையே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைச் சந்தித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் மற்றும் குளித்தலை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி ஆகியோரை சந்தித்து கள ஆய்வில் விவரங்களை சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.வி.சசிகுமார் மற்றும் சம நீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அண்ணாதுரை, செய்தி தொடர்பாளர் கு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், கரூர் நேற்று இரவு ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவருக்கு கோயிலுக்குள் சென்று வழிபட சென்ற போது தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து நடைபெற்ற கள ஆய்வு சிறப்பு பேட்டி அளித்தார்.