மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்றஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில்,நடராஜர் வடிவில் சிவபெருமான் காலைத் தூக்கி நடனமாடுவதை போல, சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகாதீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிவபெருமான் நடராஜர் வடிவில், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, மட்டையடி உத்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
முதுகைக் காட்டி வாழைமட்டையால் அடி வாங்கிச் சென்று நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள் அப்போது மட்டையடி வரலாற்றை நினைவுக்கூரும் வகையில், நடராஜருக்கும், அம்பாளுக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதை விளக்க பசுபதீஸ்வரர் கோயில் முன் இருவரும் தனித் தனியாக பக்தர்கள் முன் எழுந்தருளினர்.இருவரையும் சமாதானம் செய்யும் வகையில் சுந்தரமூர்த்திநாயனார் பல்லாக்கில் வந்து, அம்பாளிடம் முறையிடுவது போன்றும், தண்டபாணி தேசிகர், சுந்தரராக தன்னைப் பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது செல்வதும், பின்னர் இரண்டாவது முறையாக தூது சென்ற போது, அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது போன்ற புராண வரலாறு தத்ரூபமாக சிவனடியார்களால் நடித்துக் காண்பிக்கப்பட்டது.
பின்னர் தூது சென்ற தண்டபாணி தேசிகருக்கு வாழை மட்டையால் அடி விழுந்ததுபோல அரங்கேற்றம் நடந்தது. தொடர்ந்து சண்டிகேசுவரருடன், சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி பேசும் போது, அம்பாளின் கோபம் தணிந்து தெளிவு பெற்றதும் விளக்கப்பட்டது. பின்னர் சமாதானம் அடைந்த அம்பாள், நடராஜருடன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்கிடையே நிகழ்ச்சியின்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து, தங்களது முதுகைக் காட்டி வாழைமட்டையால் அடி வாங்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் மூலம் குழந்தைச் செல்வம், வியாபார விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பெண் வெட்டிக் கொலை!