கரூர்:திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த 19 வயது மாணவர், கரூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தொட்டியத்தைச் சேர்ந்த 21 வயது மாணவரும், எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கல்லூரிக்கு ஒரே கல்லூரி வேனில் சென்று வந்த இருவரும், நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் கல்லூரி வளாகங்களிலும், வெளியே செல்லும்போதும் செல்பி எடுத்துக் கொள்வதும், வாட்ஸ் ஆப்பில் இருவரும் பேசிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர், முசிறி மாணவரிடம் மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. தன்பாலின ஈர்ப்பால் தன்னிடம் நெருங்கி பழகி வருகிறார் என்பதை அறிந்த தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர், அவரிடம் பேசுவதை நிறுத்தியதோடு, வாட்ஸ் ஆப்பிலும் சாட்டிங் செய்வதை நிறுத்தியுள்ளார்.
இதனால் வருத்தத்தில் இருந்த தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர், முசிறி மாணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் இருந்த பிரச்னை குறித்து அறிந்த முசிறியைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர், இனி அவருடன் பேசக்கூடாது என கூறி அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் போதை ஊசி போட்டுக் கொண்ட மாணவர் உயிரிழப்பு..! நடந்தது என்ன?
இந்நிலையில், நேற்று (நவ.27) காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்ல வாகனத்தில் அமர்ந்திருந்த முசிறியைச் சேர்ந்த மாணவருக்கு முன் இருந்த சீட்டில் அமர்ந்த தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர், ஆத்திரத்தில் தன் கையில் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் மாணவரின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் மாணவர் அலறியதைக் கேட்ட வாகன ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு திருப்பி, அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மேலும், இது குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீசார், கத்தியால் தாக்கிய மாணவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், அதனை சோதனை செய்ததில், இருவரும் சாட் செய்து கொண்டதும், செல்பி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், குளித்தலை போலீசார் கத்தியால் தாக்கிய மாணவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், முசிறியைச் சேர்ந்த மாணவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் அடித்துக் கொலை.. உண்மையை மறைக்க சிசிடிவி காட்சிகளை அழித்தது அம்பலம்.. 3 பேர் கைது! நடந்தது என்ன?