கரூர்:கரூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் சேவல் சண்டை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் தவிர, மற்ற போட்டிகள் நடத்தப்படாததால் 'தைப்பொங்கல்' (Pongal Festival) திருநாளை முன்னிட்டு, ரேக்ளா குதிரைப் பந்தயம், இரட்டை மாட்டு வண்டி பந்தயம், இருசக்கர வாகன பந்தயம் ஆகியவை பெரும்பாலான இடங்களில் நடத்தப்படவில்லை.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பூலாம்வலசு சேவல் கட்டு போட்டி கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு சேவல் கட்டு போட்டியில் பங்கேற்கும், போட்டியாளர்கள் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் அனைத்து அனுமதி இன்றி சேவல்கட்டு போட்டிகள் நடத்துவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் K.பிராபகர் உத்தரவுப்படி கரூர் நகரம், கரூர் ஊரகம் மற்றும் குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில், காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, ஜன.16ஆம் தேதி ஒரே நாளில் சேவல் கட்டு சண்டை நடத்தியதாக 17 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த இரண்டு நாட்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கரூர் மாவட்ட காவல்துறை தனிப்படை போலீசாரால் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதன் அடிப்படையில், மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 நபர்கள் நேற்று (ஜன.16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கரூர் மாவட்டத்தில் சிலர், மாவட்ட நிர்வாகம் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல் பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும், 'மாவட்டத்தில் அனுமதி இன்றி பணம் வைத்தோ, சேவல்கள் கால்களில் கத்தி கட்டி, சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்துவது தெரியவந்தால், உடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண். 04324-296299 மற்றும் 9498100780-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்' எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:2023 பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உயிரிழந்த காளை வீரர் அரவிந்தராஜ்; நினைவு நாளில் பெற்றோரின் கோரிக்கை என்ன?