IT Raid நடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு; எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கோரிய வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர்: சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (மே 26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் காலை 7 மணியளவில் ஐந்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், சோதனையிட துவங்கினர். இதனை அறிந்து வீட்டின் முன்பு குவிந்த திமுகவினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் வருமானத்துறை அதிகாரிகள் வந்த காரினை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் திமுகவினரின் மீது வருமானத்துறை அதிகாரிகள் கார் கண்ணாடி உடைத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்ததனர்.
கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ஆன மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீடு, நெடுஞ்சாலை துறை சாலைபணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் சங்கர் வீடு மற்றும் அலுவலகம், கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, மன்மங்கலத்தில் உள்ள அபக்ஷ் பெரியசாமி என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குழுக்களாக வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சோதனை காலை 11 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டது.
பின்னர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரினர். இதனை அடுத்து திமுகவினர் அதிகம் கூடி இருந்த ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆதரவாளர்களை அமைதியாக கலைந்து செல்லும் படி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறையினர் பாதுகாப்பு கோரி இருந்த நிலையில் திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் இருந்து 50ற்கும் மேற்பட்ட அதிவிரைவுபடை போலீசார் கரூர் வந்தடைந்தனர். இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்ப்புகளாலும், பாதுகாப்புக்காக அனுமதி கோருவதற்காகவும் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தற்போது மீண்டும் துவங்கிய நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் 75ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: IT Raid: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெடி.. அமைச்சர் கே.என்.நேரு ரியாக்ஷன் என்ன?