குளித்தலை நெய்தலூர் காலனியைச் சேர்ந்த சவுந்தர பாண்டியன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ''குளித்தலை வட்டம் வடசேரி ஊராட்சி பூவாயிபட்டி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான 27 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்குள் தெப்பக்குளமும் வரத்துக் கால்வாய்களும் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் மழைநீரின் வரத்துக் கால்வாய் பகுதியிலும் நல்ல தரமான மணல் தேங்குகிறது. இந்த மணலை அரசின் அனுமதியின்றி, தனியார் சிலர் தினமும் 10 டிப்பர் லாரிகளில் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், இப்பகுதியின் குடிநீர் ஆதாரமும் விவசாயமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதியில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.