கரூர்கிருஷ்ணராயபுரம் தாலுகா வீரராக்கியம் பகுதியில் அம்மன் செங்கல் சூளை நடத்தி வருபவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன். இவரது செங்கல் சூளையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக நலத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர், கரூர் மாவட்ட வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது சத்தீஸ்கர் மாநிலத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 4 இளம் பெண்களில் மூன்று பேர், செங்கல் சூளையில் பணியாற்றி வந்ததை கண்டறிந்து மூவரையும் மீட்டனர். அப்போது செங்கல் சூளையில் பணியாற்றி வந்த மற்ற வட மாநிலப் பெண் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர், மேலும் 11 பெண்கள் மீட்கப்பட்டனர். மொத்தம் 14 பேர் மாயனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்குப் பின், கரூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டனர். காணாமல் போனதாக கூறப்படும், மேலும் ஒரு பெண் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ளதாக தகவல் அறிந்து அவரையும் மீட்பதற்காக சத்தீஸ்கர் மாநில சமூக நலத்துறை அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
கரூரில் கொத்தடிமைத் தொழிலாளர்கள்? - 14 வட மாநிலத் தொழிலாளர்கள் மீட்பு இந்த திடீர் ஆய்வின் போது, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆலோசனையின் பேரில் சப் கலெக்டர் சர்புதீன், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர், மாயனூர் காவல்துறை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு திரும்ப உள்ள பெண்களை உரிய ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வீரராக்கியம் அம்மன் செங்கல் சூளையில், மேலும் 40க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் பணியில் உள்ளனர். வடமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும் இடைத்தரகர்கள், குறைந்த ஊதியத்திற்கு பணியில் அமர்த்தி உள்ளனர்.
மேலும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, கொத்தடிமை முறையில் பணி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக நலத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்படாமல் அமைக்கப்பட்ட வெற்றுக்குழாய்கள்!