கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி பெரியசாமி (67). இவர் காளிபாளையம் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் கடந்த 16 ஆண்டுகளாக இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த முறையில் கால்நடை வளர்ப்பு போன்றவை செய்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் துணிக்கடை நடத்தி வந்த இவர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் தற்பொழுது இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
அவரது பண்ணையில், ஆடு, கோழி, வாத்து, மாடு, பறவை ஆகியவற்றை வளர்த்து வரும் இவர், உயிரினங்களிடமிருந்து பெறக் கூடிய கழிவுகளை நிலத்தில் இயற்கையாக பயிரிட்டு அதில் விளையக்கூடிய புல்கள், சோளத்தட்டு போன்றவற்றில் உயிரினங்களுக்கான உணவை மறுசுழற்சி முறையில் அளித்து வருகிறார்.
இவரது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தை பாராட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்திற்கு இவரை பற்றிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் தேர்வான இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
அதனை வெளிப்படுத்தும் விதமாக பெரியசாமி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகனை நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்து வரும் எனக்கு தமிழ்நாடு அரசு சான்றிதழையும் பதக்கத்தையும் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கூறி பாராட்டைப் பெற்றார்.
‘இயற்கை விவசாயம் குறித்து வழிகாட்ட தயார்’ - விவசாயி பெரியசாமி மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இயற்கை விவசாயம் நெல், சோளம்,கரும்பு, வாழை ஆகியவற்றுடன், சிறுதானிய விவசாயமான கம்பு, ராகி போன்றவை பயிரிட்டு வருவதாகவும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளின் கழிவுகளை கரைசல் மூலம் நிலத்தில் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!