தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வாரம்தோறும் சுமார் 500 முதல் 600 பேர் வந்து மனு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கரோனா காலத்தில் மனுக்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்த மனுக்கள் குறைவை பிரச்னைகள் இல்லை என்பதா? அல்லது முறையான நடவடிக்கை இல்லை என குற்றஞ்சாட்டுவதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளும், எட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும், 11 பேரூராட்சி அலுவலகங்களும், 157 ஊராட்சி மன்ற அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பாசன வசதி பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன.
இந்நிலையில், குறைதீர் கூட்டம்தான் இவர்களுக்கான நடவடிக்கையாக இருந்து வந்தது. இதன்படி, மனுதாரர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுவை பெற்றவுடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மனுவை பரிசீலனை செய்வார். பின்பு அந்த மனுக்கள் அனைத்தும் துறை வாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் கரோனா காலம் இதை தலைகீழாக மாற்றியது.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பெட்டியில் போடப்படுவதால் மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? எனத் தெரிவியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் குணசேகரிடம் கேட்டோம்.
அவர் கூறுகையில், “கரோனா பரவலால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் சரியாக நடப்பதில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டியில் மனுக்களை அளிக்க அறிவுறுத்துகிறார்கள். நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் பிரச்னையை எடுத்துக் கூற முடியவில்லை. மக்களுடைய பிரச்னைகளை நேரடியாக தெரிவிக்கும்போது ஓரளவாவது தீர்க்கப்பட்டு வந்தது. பெட்டியில் மனுக்களை போடுவதன் மூலம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது எதார்த்தமான உண்மை” என்றார்.
காணொலிக்காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தக் கோரிக்கை போதுமான நடவடிக்கை இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டிய மனுதாரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தபால் மூலம் பலர் மனுவை அளித்து வருகின்றனர். இந்தப் போக்கை உடனடியாக கைவிட்டு மாவட்ட ஆட்சியர் நேரடியாக பொதுமக்களை சந்தித்து பிரச்னையை கேட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறைந்தபட்சம் இந்த பேரிடர் காலத்தில் காணொலிக்காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: பெட்டியில் மனு அளித்த மக்கள்