கரூர்: புகழூர் குப்பம் கிராமத்தில் நியூ ஸ்டார் புளு மெட்டல் மற்றும் P. அமராவதி கல்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் குப்பம் பகுதியில் உள்ள திருமுருகன் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயன், சண்முகம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்குவாரி அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கருத்துகளை பதிவு செய்தனர். இதேபோல, குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்துகளை பதிவு செய்தனர்.
பின், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ‘கரூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் முதல் கட்டமாக சட்ட விதிமுறை மீறல்கள் நடைபெற்றதைக் கண்டறிந்து சோதனை மேற்கொண்டு உள்ளனர். மிக விரைவில் கரூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கல்குவாரிகளில் சட்ட விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் கொள்ளை, கல்குவாரி விதிமுறை மீறல்கள் குறித்து ஆய்வு நடத்த இருக்கிறார்கள்.
கனிம வளக் கொள்ளை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட புகார்கள் விசாரிக்கப்படவில்லை. மாறாக , கனிமவள கொள்ளையர்களுக்கு துணை போகும் வகையில் இருவரும் செயல்பட்டனர்.
தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றி அமைத்து உள்ளது. சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், கரூர் மாவட்ட ஆட்சியருக்கு இதுவரை எந்த தரப்பும் ஆதரவு தெரிவித்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.