கமிஷன் பிச்சை: பெண் ஊராட்சி மன்றத் தலைவர் குறித்து கண்டன போஸ்டர்கள்
கரூர்: வீடுகளுக்கு திட்ட ஒப்புதல் பெற 40 ஆயிரம் ரூபாய் கேட்பதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவரைக் குறித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கரூரை அடுத்த வெண்ணைமலை காதப்பாறை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கிருபாவதி முருகேசன்.
இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு திட்ட ஒப்புதல் பெறுவதற்கும் புதியதாக கட்டப்படும் வீடுகளுக்கு ரசீதுகள் போட கிருபாவதி பணம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரின் செயல்பாடுகளைக் கண்டித்து ஊராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யும் தண்ணீர் தொட்டிகளில் கண்டன துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், “வீடுகளுக்கு பிளான் அப்ரூவல் பெற 40 ஆயிரம் ரூபாய், புதிய வீடுகளுக்கு ரசீது போட இருபத்தைந்தாயிரம் ரூபாய் எனத் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கமிஷன் பிச்சை எடுக்கும் காதப்பாறை ஊராட்சி மன்ற பெண் தலைவர் கிருபாவதி முருகேசன் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் இவன் கட்டுமான பொறியாளர் சங்கம் பொறியாளர் நலச்சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.