தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 9, 2021, 9:00 AM IST

ETV Bharat / state

வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு!

தாழ்வான பகுதியில் இருந்த வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததையடுத்து வீட்டில் வசித்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

rain water
rain water

கரூர் நகர்ப் பகுதியைச் சுற்றி நேற்று மாலை (அக். 8) இடைவிடாது மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கரூர் - திருச்சி சாலையில் உள்ள தெரசா கார்னர் பகுதியில், சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் நடுவே சென்டர் மீடியன்கள் அமைக்கபட்டன. இதனால் தெரெசா பள்ளி முதல் கொளந்தனூர் பிரிவு வரை மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் ஒரே புறமாக நீர் வடிவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் (94) என்னும் மூதாட்டி தனது மகன் முருகேசனுடன் (74) வசித்துவந்தார். கன மழை காரணமாக தாழ்வாக உள்ள காளியம்மாள் வீட்டுக்குள் நீர் புகுந்தது.

வயோதிகம் காரணமாக காளியம்மாள் கட்டில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாமலும் அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் எழுப்ப முடியாமலும் வீட்டுக்குள் புகுந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனிடையே லேசாக மழை நின்றதும் வெளியே சென்றிருந்த முருகேசன் வீடு திரும்பி பார்த்தபோது காளியம்மாள் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த தான்தோன்றிமலை காவல் துறையினர் மூதாட்டியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கரூர் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நீர் வெளியேற முடியாமல் இருந்த கரூர் - திருச்சி சாலையில் நீரை வெளியேற்றினர்.

இதையும் படிங்க:'மூதாட்டியை உயிருடன் கடித்து தின்ற தெரு நாய்கள்' பெங்களூரில் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details