கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சமூக இடைவெளி அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதே நடவடிக்கையை வைரஸால் பேரழிவைச் சந்தித்த சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே, கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, அனைத்து குடிமக்களும் சமூக கடமையாக இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவை பொறுப்புடன் கடைபிடிக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் ஒழுக்கத்துடன் விதிமுறையை கடைபிடித்தால் கரோனா பாதிப்பை தடுக்க முடியும்.
இந்த ஊரடங்கு உத்தரவால், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என அச்சப்பட தேவையில்லை. மக்களின் தேவைகள் அனைத்தையும் அரசு பூர்த்தி செய்யும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிப்படை தேவையான மளிகைப்பொருட்கள், பால், மருந்து போன்றவற்றை நாள்தோறும் வழங்க அரசு திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.