தமிழ்நாடு

tamil nadu

சிலம்பாட்டத்தை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் - சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்ற நிகில் செந்தூரன்

By

Published : Jul 16, 2023, 12:40 PM IST

சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ள நிகில் செந்தூரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்ற நிகில் செந்தூரனின் பிரத்தேக பேட்டி
சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்ற நிகில் செந்தூரனின் பிரத்தேக பேட்டி

நிகில் செந்தூரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டி

கரூர்: நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதல் பரிசு வென்று, கரூரைச் சேர்ந்த நிகில் செந்தூரன் என்ற 12 வயது பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையம் கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர், ரகுநாதன் - கிருபா தம்பதியர். இவர்களது மகன் நிகில் செந்தூரன். கடந்த ஜூலை 8, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது.

11 முதல் 12 வயது வரையிலான பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனித்திறமை பிரிவில் இந்தியா சார்பில் நிகில் செந்தூரன் கலந்து கொண்டார். போட்டியில் சிறப்பாக களமிறங்கிய நிகில் செந்தூரன் முதல் பரிசான தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் வெற்றி கண்டு சொந்த ஊர் திரும்பிய நிகில் செந்தூரன், புகலூர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கந்தம்பாளையம் பகுதியில் பாரதம் அரசியல் சிலம்பம் அகடாமி தலைமை ஆசான் எஸ்.கிருஷ்ணராஜ், ஆசான் கே.சௌந்தரராஜன் ஆகியோர் இல்லம் தேடி சென்று பாராட்டு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு சாதனை மாணவன் நிகில் செந்தூரன் சிறப்பு பேட்டியளித்தார். பேட்டியில் பேசிய மாணவன், சிலம்பம் அகாடமி மூலம் தனது ஆசான் தனது தனித்திறமைகளை ஊக்குவித்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறச் செய்து, சர்வதேச அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் தனக்கு சிலம்பம் கற்றுக் கொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்திற்கு காரணம் தனது தந்தை ஊக்கவிப்பே என்றார். மேலும், விடுமுறை நாட்களில் சிலம்பம் கற்றுக் கொண்டதாகவும், தாய் கிருபா வீட்டுப்பாடங்கள் செய்வதற்கும், படிப்பதற்கும் உதவி செய்ததால் படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் கவனம் செலுத்த முடிந்தது என கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் சிலம்பம் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவேண்டும் எனவும், அதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவ்வாறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் சேர்க்கப்பட்டால், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கம் வென்று பதக்க பட்டியலில் இடம் பிடிப்பேன் என தன்னம்பிக்கையை வெளிபடுத்துகிறார், நிகில் செந்தூரன்.

தன்னைப் போன்று சிலம்பத்தில் திறமை கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் எனவும், ஒலிம்பிக்கில் சிலம்பம் சேர்க்கப்பட்டால் தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தனது ஆசையையும் வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நிகில் செந்தூரனுக்கு தொடர் பயிற்சி அளித்து வரும் பாரதம் மார்ஷல் சிலம்பம் அகடாமி சௌந்தரராஜன் கூறுகையில், “சென்னையில் தங்கி ஏழாம் வகுப்பு படித்து வரும் நிகில் செந்தூரன், என்னிடம் பயிற்சியில் விடுமுறை நாட்களில்தான் முதலில் சிலம்பம் கற்றுக்கொள்ள வந்தார்.

பின்னர் சிலம்பம் தமிழர்களின் பாரம்பரிய கலை என்பதை உணர்ந்து தனது தனித்துவமான சிலம்பாட்டத்தில் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகள் பெற துவங்கினார். இதனால் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்தார். எனவே, சர்வதேச அளவில் நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 106 சிலம்பாட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் 12 வயதினருக்கான தனித்திறமை பிரிவில் நிகில் செந்தூரன் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிலம்பாட்டப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் சிலம்பாட்டப் போட்டியில் சாதனை புரியும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத தனி இட ஒதுக்கீடும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. தற்போது உயர் கல்வி பயில சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் தனி இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் சிலம்பாட்டப் போட்டி இடம் பெற வேண்டும் என்பது பல ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக் கொள்ளும் இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. அடுத்து நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டப் போட்டியை சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டால் சிலம்பத்தில் இந்தியாவுக்கு பதக்கங்கள் மேலும் குவியும் என்பதில் துளியும் ஐயமில்லை” என கூறினார்.

இதையும் படிங்க:Marketa Vondrousova: சாதனை நிகழ்த்திய மார்கெட்டா: தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற வீராங்கனை!

ABOUT THE AUTHOR

...view details