கரூர்:அதிமுக ஆட்சியில் பொற்காலமாக இருந்த போக்குவரத்து துறை, திமுக ஆட்சியில் சீரழிந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் பொய்யை சொல்லி முதலமைச்சர் ஆட்சி செய்வதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்.20) கரூர் மினி பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''5 ஆண்டுக்கு ஒரு முறை கழகத்தின் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை புதுப்பித்தல் பணிகளுக்கு பொதுச்செயலாளர் உத்தரவின் பெயரில் 10,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து ஒன்றியம், நகரம், பேரூராட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, கரூர் மாவட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் பூத்து கமிட்டி அமைக்கும் பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''தான் வகித்து வந்த போக்குவரத்து துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய பேருந்துகள் ஏதும் விடப்படவில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பினால் 2006-2011 காலகட்டத்தில், நேரு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாங்கிய 15,000 பேருந்தை தற்போதைய அமைச்சர் கணக்கு காட்டுகிறார். அந்தப் பேருந்துகள் அனைத்தும் ஸ்கிராபுக்கு சென்றுவிட்டன'' என்றார்.
''தற்போது அரசு டீசல், மானியம் வழங்குவது குறித்து பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். டீசல் விலை உயர்ந்த போது, பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் முதன்முறையாக டீசல் மானியம் அளித்தார். சென்னையில் மூத்தகுடி மக்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது. அதற்கான மானியத்தையும் அதிமுக அரசு செலுத்தியது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு செய்ய வேண்டிய நடைமுறை. ஆனால், திமுக அரசு இதனை சாதனையாக கூறிக் கொள்கிறது'' என்றார்.
மௌனம் காக்கும் தொழிற்சங்கங்கள்: ''திமுகவில் அங்கம் வகிக்கக்கூடிய தொழிற்சங்கங்கள் கடந்த அதிமுக ஆட்சியில், ஊதிய உயர்வு 25 சதவீதம் கேட்டதை அடுத்து அவர்களிடம் 8 சதவீதம் வரை தருவதாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது தேர்தல் வந்துவிட்டதால் இடைக்கால நிவாரணமாக வழங்கினோம். ஆனால், தற்போது விடியா திமுக அரசு, ஊதிய உயர்வு 5 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளது.