கரூர்: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்துச் சென்றும் காவல் துறையினர் கைதுசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியிலுள்ள காந்தி சிலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர், நேற்று (பிப்.19) முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று மீண்டும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணிதலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுகூடி கரூர் நகராட்சிக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரம் இல்லாத வகையில் அடித்தளம் அமைக்கப்பட்டு, நிற்கும் வகையில் காந்தி சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமர்ந்த நிலையிலிருந்த காந்தி சிலை நல்ல நிலையிலிருந்தபோதும், அது அகற்றப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ்கட்சியினருக்கு ஏன் தெரிவிக்கவில்லை எனக் கூறியும், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் நிற்கும் நிலையிலுள்ள காந்தி சிலையின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர், சிலையை நாளை (பிப்.21) முதலமைச்சர் திறக்கக்கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜோதிமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.