கரூர்: வெள்ளியணை அருகே உள்ள தாளியாபட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பட்டியல் சமூக சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கலப்புத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கரூர் காமராஜபுரத்தில் இயங்கி வரும் பாலு பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் தனது குடும்ப செலவிற்காக ரூ.60,000 கடன் பெற்று 10% வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.
அதிக வட்டியாக இருந்தாலும் தனது குடும்பத் தேவைக்காக பெற்ற கடன் என்பதால் தவணைத் தொகையை செலுத்தி வந்த நபர் திடீரென வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் ஓய்வில் இருந்துள்ளார் இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்படவே கடனுக்கான வட்டி தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது.
கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைக் கேட்டு நிதி நிறுவனம் சார்பில் தினந்தோறும் தொலைப்பேசி மூலமாகவும் நேரில் சென்று கடனை கராராக வசூல் செய்ய அழுத்தம் கொடுத்ததினால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், வெள்ளியணை காவல் நிலையத்தில் கடன் வாங்கிய நபர் மற்றும் அவரது குடும்பத்தார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு மாத காலம் அவகாசம் பெற்றுள்ளனர்.
பின்னர் கடனை திரும்பச் செலுத்துவதற்காகக் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் ஒன்றில் டெய்லராகவும் அவரது மனைவி மற்றொரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பேக்கிங் செய்யும் வேலையும் செய்து வந்துள்ளனர். இதனிடையே நபரின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் கடனுக்கான கொடுக்கப்பட்ட அவகாச காலம் முடிந்து விட்டதால் மீண்டும் நிதி நிறுவனத்தினர் ஆட்களை அனுப்பி தினந்தோறும் கடன் தொகையைச் செலுத்தக் கோரி தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தினர் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை கடன் வாங்கிய நபரின் மனைவி பணி முடித்து மாலை 6 மணி அளவில் வீடு திரும்பிய போது அவரை வழிமறித்து நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இளவரசன், பாலசுப்பிரமணியன், சந்தோஷ், பொன்னுசாமி உள்ளிட்ட நான்கு பேர் நடுரோட்டில் கையைப் பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.