கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் வீடு கரூர் அடுத்த ராமேஸ்வரபட்டியில் உள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அவரது வீடு, சகோதரர் அசோக் வீடு, டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பழைய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று சென்னை காவல் துறையினர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான நான்கு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதல் கட்டத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் 95 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாகப் அவர் மேல் புகார் இருந்தது. 2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது அவர் மோசடியில் ஈடுபட்டதாக அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.