தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் வெள்ளியணை பெரியகுளத்தில் நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் அருகே 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளியணை குளத்தில் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 22, 2023, 9:36 PM IST

கரூர் வெள்ளியணை பெரியகுளத்தில் நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர்:கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வெள்ளியணையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது, பெரியகுளம். இப்பகுதியிலுள்ள குளத்திற்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் உள்ள குடகனாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 55 கிலோ மீட்டர் கடந்து கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் விவசாயப் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், காலநிலைக்கு ஏற்ப வறட்சி, பருவமழை தவறிய மழை பெய்வது உள்ளிட்ட காரணங்களால் குளம் பராமரிப்பு இன்றி கடந்த 40 ஆண்டுகளாக வறண்டு, தண்ணீர் இன்றி காணப்பட்டது. நீண்ட நாட்களாக விவசாயிகள் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் வெள்ளியணை குளம் தூர்வாரப்பட்டு, குடகனாறு அணையில் இருந்து உபரிநீர் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார்.

இதன் பின்னர் அமைந்த திமுக அரசு சார்பில், தூர்வாரப்பட்டு நடப்பு ஆண்டில் குடகனாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளியணை பெரியகுளத்தில் சேமிக்கப்பட்டு தண்ணீர் நிரம்பியது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட வெள்ளியணை பெரியகுளத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பியுள்ளதால் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டுத்துறை சி.வி. கணேசன் மற்றும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் இணைந்து வெள்ளியணை குளத்தில் தண்ணீரை விவசாயப் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.

தமிழ்நாடு அரசு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வெள்ளியணை பெரியகுளம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்டு, குளம் நிரம்பி வழிந்து, விவசாயப் பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வெள்ளியணை ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கரூர் மாவட்டத்தில் மிக முக்கிய ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியினை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 15 கோடி முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறிப்பாக, தாரம்பாளையம் ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கரூர் மாவட்ட ஆட்சியரின் கருத்துரையின்பேரில் வனத்துறைக்கு வேறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்படவுள்ளது.

இதன் பின்னர் அமராவதி ஆற்றில் உள்ள உபரி நீரை தாரம்பாளையம் ஏரிக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வெள்ளியணை மற்றும் பஞ்சப்பட்டி ஏரிகள் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு சில வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இது தவிர ஏரியின் கரைகளை முழுவதுமாக வலுப்படுத்துவதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:TN Rains: தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details