கரூர்:(IT Park in Karur): கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மையம் சார்பில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பணிடங்களுக்கு வேலைதேடும் படித்த இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான போட்டியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, 'நேற்று கோவை மாவட்டத்திலும் இன்று கரூரிலும் நடைபெற்றுவரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தனியார் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன.
நிச்சயம் அரசு வேலைவாய்ப்புகள் தகுதியானவர்களுக்கு கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளிக்கும்' எனக் கூறினார்.
கரூரில் ஐடி பார்க்
கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பேசிய தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'Made in Karur' என்று உலகளவில் பேசும் அளவிற்கு கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் முதன்மை பெறும்.
தமிழ்நாட்டில் வேலையின்மையை உருவாக்கும் நோக்கோடு முதலமைச்சரின் முயற்சியால் பல்வேறு நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றார்.