தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் ஐடி அதிகாரிகளை தடுத்த திமுகவினர்.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நூதன விளக்கம்! - Karur news today

பெண் ஐடி அதிகாரி உடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்தும், எதிர்கட்சிகளின் விமர்சனம் குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

’கதவ தட்டுனா யாருனு கேட்பது இல்லையா.. அப்படித்தான் இதுவும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
’கதவ தட்டுனா யாருனு கேட்பது இல்லையா.. அப்படித்தான் இதுவும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

By

Published : May 28, 2023, 11:17 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

கரூர்:திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (மே 27) நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைவைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “செய்தியாளர்கள் செவி வழி செய்திகளை தொழில் போட்டி காரணமாக அப்படியே வெளியிடுகின்றனர்.

இதனை பொதுமக்கள் நம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே, செவி வழி செய்திகளை சற்று விசாரணை செய்து வெளியிட்டால் சரியாக இருக்கும். பொதுவாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வரும் சில நிறுவனங்கள் எல்லாம், நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது தொடங்கப்பட்டு லாபகரமாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள்.

அவர்கள் முறையாக வருமான வரியும் செலுத்தி வருகின்றனர். ஏதேனும் வரி செலுத்தப்படாத தொகை இருப்பின், அதையும் அந்த நிறுவனங்கள் செலுத்த தயாராகத்தான் இருப்பார்கள். தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையைக் கண்டு நான் அச்சப்படவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென வருமான வரித்துறை சோதனை எனது வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்டது. பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? அவர்களின் நோக்கம், தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து நெருக்குதல் கொடுப்பது. அதேபோலத்தான் எதிர் வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை முடிய இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அந்த நிறுவனங்கள் வரியைச் செலுத்தி முறைப்படுத்திக் கொள்வார்கள். அதேபோல் வருமான வரித்துறை சோதனையின் முடிவில், அலுவலகங்களில் சீல் வைக்கப்படுவது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

அடுத்த நாள் சோதனையிட வேண்டிய சூழல் இருப்பின், சீல் வைத்துவிட்டு மீண்டும் அதனை அகற்றி சோதனையைத் தொடர்வார்கள். அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக, எதிர்கட்சித் தலைவர் பற்றி முக்கியமான ஒன்றைக் கூறி ஆக வேண்டும் அவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கவே தகுதி இல்லாதவர்.

எனக்கு வேண்டியவர்கள், அவர்களது நண்பர்கள் என செவி வழி செய்தியாக எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தேன்.

இப்போதும் சொல்கிறேன், சோதனை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். சோதனைகள் முடிந்த பிறகு, முழு விவரங்கள் தெரிய வரும். சுவர் ஏறி குதித்து அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரு கட்டத்தில் இரண்டு பெரிய பைகளைக் கொண்டு வந்ததன் காரணமாக, அங்கு இருந்தவர்கள் கேள்விகள் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். சரியான பதில் அளிக்காத வருமான வரித்துறை அதிகாரிகள் காரணமாகவே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வருமான வரித்துறை அதிகாரிகள் யார் வீட்டிலும் திடீரென்று உள்ளே நுழையும் போது, அடையாள அட்டை காண்பியுங்கள் என்று கேட்பது வழக்கம். கதவை தட்டும்போது நீங்கள் யார் என கேட்டு கதவை திறப்பது வழக்கம். அந்த அடிப்படையில், மாவட்ட காவல் அதிகாரி தகவல் இல்லை என கூறியதை எதிர்கட்சித் தலைவர் புரிந்து கொள்ளாமல் விமர்சித்துள்ளார்.

அவர் எதிர்கட்சித் தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவர். வேலுமணி போன்றவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, கட்சிக்காரர்களை அங்கே கொண்டு வந்து குவித்து, மூன்று வேளை அவர்களுக்கு சாப்பாடு வழங்கி இடையூறு செய்ததுபோல் இங்கு யாரும் செய்யவில்லை. அது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் திமுகவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை சுமூகமாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதாலேயே சோதனை நடைபெறுகிறது என குற்றம் சுமத்தியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர், ஜெயக்குமார்.

தொலைக்காட்சிகளில் எண்ணற்ற சேனல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் வரும் நகைச்சுவை சேனலைப்போல், காமெடியனாக வந்து சென்று கொண்டிருக்கிறார். அவரது கூற்றுக்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலின்போது நான் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரைடு நடத்தினார்கள். எத்தனையோ ரெய்டுகளை சந்தித்து இருக்கிறேன். இன்னும் எத்தனை ரைடு வந்தாலும் சந்திப்பேன்.

ஓராயிரம் சோதனைகளை நடத்தினாலும் சரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நலத்திட்டங்களினால் இந்த அரசு மிகப் பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவதை எத்தனை வருமான வரித்துறை சோதனை நடத்தினாலும் தடுக்க முடியாது” என்றார்.

இதையும் படிங்க:'செந்தில் பாலாஜி தன்னுடன் மு.க.ஸ்டாலினையும் சிறைக்கு கூட்டிப் போவார்' - ஷியாம் கிருஷ்ணசாமி சர்ச்சை பேச்சு

ABOUT THE AUTHOR

...view details