“தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்”; அமைச்சர் சி.வி.கணேசன் கரூர்: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் உள்ள வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தில் நேற்று கரும்பு ஆலைக்கு மர்ம நபர்களால் வைக்கப்பட்ட தீயில் கருகி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பூர் பகுதியைச் சேர்ந்த சுகுராம் (28), யஷ்வந்த் (18), கோகுல்(23) ஆகிய 4 வடமாநிலத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கோகுல் தவிர மற்ற மூன்று பேருக்கும் 70% தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காயங்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேர தீவிர மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வடமாநிலத் தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், “நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம், வீ.புதுப்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவருக்கு கரும்பு ஆலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் வைத்த தீயால் ஆலையில் தங்கிப் பணியாற்றி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் 4 பேரும் தீயில் சிக்கி, படுகாயம் அடைந்தனர்.
தற்போது அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உயர்தர மருத்துவ வசதிகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் வென்டிலேட்டர் வசதி, மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மூலம் பாதிக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு கரூர் ஆட்சியர் மூலம் 24 மணி நேரமும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் நியமிக்கவும், போதிய மருந்துகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாநிலத் தொழிலாளர்களை உயிருடன் காப்பாற்றுவதற்கு அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் நிலை குறித்து கேட்டதற்குப் பதில் அளித்த அமைச்சர், “4 பேரையும் நேரில் பார்த்தேன். அதில் 2 பேர் மயக்க நிலையில் இருந்தனர். 2 பேர் சாதாரண நிலையில் இருந்தனர். மேலும் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு அரசு சார்பில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''நிச்சயமாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி, உரிய நிவாரணம் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்’’ என அமைச்சர் தெரிவித்தார். கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: GT Vs SRH: ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்!