தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இன்றுடன் தேர்தல் பரப்புரை முடியவுள்ளதால் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவினரும், காங்கிரசாரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இறுதிக் கட்ட பரப்புரையை நிறைவு செய்ய அதிமுகவினர் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் நடத்த முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். இதையடுத்து அதே இடத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளார்.
இதையறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாங்கள் தான் பரப்புரை மேற்கொள்ள முதலில் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறினார். அதிகாரிகள் எப்படி காங்கிரசாருக்கும் அனுமதி வழங்கினார்கள் என்றும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.