கரூர்: செங்குந்தபுரம் காமராஜர் வடக்கு பகுதியைச் சேர்ந்த எம்ஆர்கே.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு உத்தரவின் அடிப்படையில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புலத் தணிக்கை மேற்கொண்டு, தமிழ்நாடு சிறு கனிம விதிகள் 1959இன் கீழ் விதிமுறை மீறல்கள் இருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 12 குவாரிகளில் மட்டும் 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இது குறித்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட விரோத கல் குவாரிகள் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத கல்குவாரிகள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவினால்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் மாதம் ஒன்றுக்கு ஐந்து கல்குவாரியும், மாவட்ட வருவாய் அலுவலர் 10 குவாரிகளும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதுவரை எத்தனை குவாரிகளில் ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கல்குவாரிகள், அரசை மிரட்டும் வகையில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், அரசு நடுநிலையோடு செயல்பட்டு சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும், அரசு சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை. முறையாக டிஜிட்டல் சர்வே மூலம் கல்குவாரிகளை ஆய்வு செய்தால், பல லட்சம் கோடி அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அபராதமாக வசூல் செய்ய முடியும். ஆனால், பல கோடி இழப்பீடு ஏற்படுத்திய கல்குவாரிகளுக்கு சில லட்சங்களில் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தலையிட்டதால் 12 கல்குவாரிகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது என கணக்கீடு காட்டுவதற்காக கரூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை உள்ளது. குவாரி ஒன்றுக்கு 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், 12 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை.