தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:52 PM IST

ETV Bharat / state

கரூரில் புதிய ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.. எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன?

Karur New Collector: கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

In Karur district new district collector and superintendent of police have taken charge
புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்

கரூர்: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கரூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் 1910-க்கு பிறகு திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட பகுதியாகவும் இருந்து வந்த நிலையில், 1995-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கரூர் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

28 ஆண்டுகள் கடந்துவிட்ட கரூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக கரூர், குளித்தலை என 2 வருவாய் கோட்டங்கள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், மண்மங்கலம், புகழூர் என 7 வருவாய் வட்டங்கள், குளித்தலை, பள்ளப்பட்டி, புகலூர் என 3 நகராட்சிகள், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், புலியூர், 8 பேரூராட்சிகள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் கரூர் மக்களவைத் தொகுதி உள்ளடக்கிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தின் 18-வது ஆட்சித் தலைவராக பிரபுசங்கர் 2021 ஜூன்-16 முதல் 2023 அக்டோபர்-16 வரை இரண்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கரூர் மாவட்டத்தின் 19-ஆவது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக மீ.தங்கவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை சுகாதாரத்துறையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திலும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகம், தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளதால், மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டதை அடுத்து, கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கி.பிரபாகர் நியமிக்கப்பட்டார். இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், கரூர் நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல், சட்டவிரோத மது விற்பனை, வழிப்பறி கொள்ளை, கொலை, தொழிலதிபர்கள் கடத்தல், கனிம வளங்கள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் புதிய ஆட்சி தலைவர் மற்றும் புதிய காவல் கண்காணிப்பாளர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கரூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் கண்காணிப்பாளரும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிர்வாகம் இருக்கும் என உறுதி அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details