கரூர்: கரூரில் அமலாக்கத்துறை நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு, பண மோசடி வழக்கு தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் செந்தில் பாலாஜியின் புகைப்படம் அனைத்தும் அரசு நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 387 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் பேனரில் வெள்ளைத்தாள் கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் தான்தோன்றி மலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து துறை சார்பில் 1,699 பயனாளிகளுக்கு ரூபாய் 21.38 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், தாந்தோணி ஒன்றிய குழுத் தலைவர் சிவகாமி, கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேன்மொழி உள்ளிட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ மாணிக்கம் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக, விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் இடம் பெறவில்லை. திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்ட வரவேற்பு பேனரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் இடம் பெறவில்லை.
செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு, ஐந்து மாதங்களுக்கு மேலாக இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அவரது புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் திடீரென, டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் செந்தில்பாலாஜியின் புகைப்படம் இடம்பெறாதது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்