கரூர்: இந்தியத் திருநாட்டின் 73ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையின் மரியாதையினை ஏற்று, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், கரோனா கட்டுப்பாடு பணிகள், முன்கள பணிகள், அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், காவல்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா 8 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை 10 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் தேய்ப்புப் பெட்டி 5 நபர்களுக்கும், தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் எம்ராய்டரி தையல் இயந்திரம் 2 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.