கரூர்:கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் கடந்த மே 26ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்றபோது, திமுகவினர் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி தாக்கியதாக கரூர் மற்றும் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த புகார் அடிப்படையில் 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். இதனைத் தொடர்ந்து மே 31ஆம் தேதி கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், திமுகவினர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திமுகவினருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ், திமுகவினருக்கு ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 28ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற 15 திமுகவினர் அடுத்த மூன்று நாட்களில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு அடிப்படையில், ஜூலை 31ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் முன்னிலையில் திமுகவினர் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக திமுகவினர் மீண்டும் சிறையில் 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேர் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நிலையை காரணம் காட்டி, சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி திமுகவினர் 15 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், 15 பேர் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுகவினர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மீண்டும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 28ஆம் தேதி சிறையில் இருந்த 15 திமுகவினர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மேலும் 15 நாட்கள் சிறைக்காவலை நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி திமுகவினர் தொடர்ந்த வழக்கு மூன்றாவது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நான்காவது முறையாக திமுக சார்பில் 15 பேருக்கு ஜாமீன் மனு கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (செப்.27) கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற (JM-1) நீதிபதி அம்பிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில் திமுகவினர் சிறைக்காவலில் 60 நாட்களுக்கு மேல் இருந்ததால், ஜாமீன் வழங்க வேண்டும் என அவர்களது வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அம்பிகா, திமுகவினர் 15 பேருக்கும் கரூர் மற்றும் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும்வரை தினந்தோறும் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திமுகவினர் 15 பேர் இன்று (செப்.28) அரசு விடுமுறை என்பதால் நாளை கரூர் மற்றும் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட உள்ளனர்.
இதையும் படிங்க:‘மும்பை சென்சார் போர்டு ரூ.6.5 லட்சம் வாங்குனாங்க’.. நடிகர் விஷால் பரபரப்பு புகார்!