கரூர்:கரூர் மாவட்டம், தென்னிலையைச் சேர்ந்த விவசாயி ராஜாவை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிரட்டியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வைரல் ஆனது. இந்நிலையில், இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அளித்த விளக்கம், 'ராஜா என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என மிரட்டியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து விளக்கம் அளிக்க இந்தப் பதிவு அவசியமாகிறது. செய்திகளில் சொல்லப்படும் உரையாடல் என்பது உண்மைதான் என்றாலும் அது முழுமையானது அல்ல என்றும் திரிக்கப்பட்டது என்றும் முதற்கண் தெரிவிக்கப்படுகிறது.
கரூர் மாவட்டம், தென்னிலை, மேல்பாகம் கிராமத்தைச் சேர்ந்த திரு.ராஜா த/பெ ராசப்பன் என்பவர் கடந்த பல ஆண்டுகளாகவே சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் மீது கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை மற்றும் கரூர் நகர காவல் நிலையங்களிலும் மதுவிலக்கு பிரிவிலும், இன்னும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் பத்து வழக்குகள் கடுமையான பிரிவுகளில் போடப்பட்டது ஆகும்.
மேலும் இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளையும் தொழில் முனைவோரையும் தொடர்ந்து மிரட்டி வருவதாகப் பல்வேறு புகார்கள் வரப் பெற்றுள்ளன. மேலும் இவர் மீது 107 சி.ஆர்.பி.சி பிரிவின் கீழ் விசாரிக்க கரூர் வருவாய் கோட்டாட்சியர் மூன்று முறை சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. இது குறித்து கரூர் வருவாய் கோட்டாட்சியர், கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளருக்குப் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் க.பரமத்தி வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின்சார வாரியத்தால் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 48 இடங்களில் 41 இடங்களில் கோபுரம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இப்பணியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி ராஜா தொடர்ந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வந்தார்.
மேலும் உயர் நீதிமன்றத்தில் அவரால் வழக்குத் தொடரப்பட்டதில் மாவட்ட ஆட்சியர் விசாரித்து உத்தரவிட மாண்புமிகு நீதிமன்றம் பணித்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டு, பணி தொடர்வதற்கு உத்தரவு அளிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசியில் பேசியபோது, அவர் மீது உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதை ராஜா தவறாக திரித்து விவசாயிகள் எதிர்க்கும் மின் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட ஆட்சியர் மிரட்டியதாக தவறாக சித்தரித்து, ஒரு ஆடியோவை ராஜா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை பல்வேறு சங்கத்தினரும் பாராட்டி உள்ளனர். விவசாயி என்ற போர்வை போர்த்திக்கொண்டு தொடர்ந்து தவறு இழைத்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையிலேயே ராஜா என்பவருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அவர் மீதுஉள்ள புகார்களின் அடிப்படையில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விவசாயி ராஜா விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார். அந்த விளக்கத்தில், “கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் குரல் பதிவு வெளியானதும், அது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்ட பொழுது, பாரதி சிமென்ட் நிறுவனத்திடம் இருந்தும் மின் தொடரமைப்பு கழக ஒப்பந்ததாரர்களிடம் இருந்தும், தான் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறியுள்ளார்.
அது தொடர்பாக கீழ்க்கண்ட விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். கரூர் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டது போல், அது பாரதி சிமென்ட் அல்ல சத்யா சிமென்ட் நிறுவனம். அது தன்னுடைய நிலமான தென்னிலை மேற்கு கிராமம் புல எண்.446 வடபுற எல்லையில் அமைந்துள்ளது.