தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IT Raids: கரூரில் 8 நாளாக நடந்த ஐடி ரெய்டு.. பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணம்!

கரூரில் 8வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் இரண்டு பெட்டிகளில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 2, 2023, 8:09 PM IST

கரூர்:கடந்த மே 26 ஆம் தேதி முதல் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் மே 26ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தாக்கியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட மூன்று வழக்குகளில் கரூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் லாரன்ஸ், புல்லட் பூபதி உள்ளிட்ட 15 பேர், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில் 6 பேர் என மொத்தம் 21 கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 பெட்டிகளில் முக்கிய ஆவணங்கள்:இவர்களில் பிரபு என்ற திமுக நிர்வாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கரூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்ட 19 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்று ஜூன் 2ஆம் தேதி, கரூர் நகர பகுதியில் உள்ள லாரி மேடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல வழக்கறிஞர் செங்குட்டுவன் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 2) சோதனை மேற்கொண்டனர். சுமார் மதியம் 12 மணியளவில் அலுவலகத்தில் இருந்து இரண்டு அட்டை பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் எடுத்துச் சென்றனர்.

கடந்த 8 நாட்களாக நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகள் எந்த விதமான ஆவணங்களையும் எடுத்துச் செல்லாத சூழ்நிலையில், இன்று 8வது நாள் சோதனையில் இரண்டு அட்டை பெட்டிகளை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள சின்ன கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள இன்ஜினியர் பாஸ்கரன் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மதியம் 2:30 மணியளவில் சோதனையை அதிகாரிகள் முடித்துக் கொண்டனர். அங்கிருந்து அதிகாரிகள் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை.

கரூரில் 8 நாளாக நடந்த ஐடி ரெய்டு.. பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணம்

ஐடி ரெய்டு முடிவுக்கு வருகிறதா?:கரூர் வருமான வரித்துறை சோதனை 8வது நாள் எட்டியுள்ள நிலையில், இன்றுடன் வருமான வரித்துறை சோதனையை முடித்துக் கொள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்றுடன் வருமானவரி துறை சோதனைக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள கடிதம் வழங்கியுள்ளனர்.

இதனால், கரூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்களான ராயனூர் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். இதே போல, ராயனூர் பகுதியில் வசித்து வரும் கொங்கு மெஸ் சுப்பிரமணிக்கு சொந்தமான கரூர் கோவை சாலையில் உள்ள பிரபல உணவகமான, கொங்கு மெஸ் அலுவலகம் மற்றும் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சில கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்த நில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர். கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு இன்றுடன் முடிவுக்கு வந்தது என்றே கூறப்படுகிறது.

இதையும் படிங்க:IT Raids: ஓய்ந்த அலை மீண்டும் மோதுகிறதா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் ஐடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details