கரூர்: கடந்த மே 26ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு பல இடங்களுக்கு சீல் வைத்து இருந்தனர்.
எட்டு நாட்கள் நடந்த முதல் கட்ட சோதனையில் இரண்டு பெட்டிகளில் முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக கூறப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
இதனை அடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஜூன் 14ஆம் தேதி அதிகாலை வரை நடந்த இந்த சோதனையின் இறுதியில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. பின்னர் அவரின் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் நீதிமன்ற அனுமதியுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனை அடுத்து ஜூன் 23ஆம் தேதி வருமான வரித்துறையினர் இரண்டாவது கட்டமாக சோதனையில் ஈடுபட்டனர். முதல் கட்ட சோதனையில் சீல் வைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான சில இடங்களில் வைக்கப்பட்டி இருந்த சீலை அகற்றி அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி இருந்தனர். கரூரில் அமைச்சர் சம்பந்தப்பட்ட இடங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டதால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்டமாக இன்று கரூரில் வருமான வரி அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனையை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மதியம் 1 மணியைக் கடந்த பின்னரும் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வருத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று அவர் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான மூன்றாவது நீதிபதி விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ‘அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்’ : ஆளுநரை எதிர்த்து மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!