கரூர்:தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அமைச்சரின் உறவினர், நண்பர்களுகளின் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மே 26 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
முதல் நாள் சோதனையின்போது, வருமான வரித்துறை அதிகாரிகளின் காரை தாக்கினர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டின் முன்பு திமுகவினர் முற்றுகையிட்டு அதன் கண்ணாடியை உடைத்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால், இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கரூரில் ஜூன் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், சகோதரர் வீடு என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அன்று இரவு சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
இதனால் அமைச்சருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனைகளால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பை கிளம்பியுள்ளது.
இன்று கரூர் - ஈரோடு சாலையில் அமைந்துள்ள கோதை நகர் அன்னை அப்பார்ட்மெண்ட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5க்கும் மேற்பட்ட வாகனங்களில், மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சென்று சோதனை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக அன்னை அப்பார்ட்மெண்ட் பகுதியில் குடியிருக்கும் கரூர் கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி மற்றும் அறிவர் ரமேஷ் ஆகியோர் வீடுகளில் சோதனையை தொடங்கி உள்ளனர். கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Opposition Meeting: பாஜகவுக்கு எதிராக விறுவிறுப்படையும் எதிர்கட்சிகள் கூட்டம்