கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுக மாவட்ட பொறுப்பாளர் (கரூர்) செந்தில் பாலாஜி களமிறங்குகிறார். இருவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு திமுக இளைஞரணி பொறுப்பாளரை அதிமுகவினர் நள்ளிரவில் வழிமறித்து தாக்கிய வீடியோ காணொலியை, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, அதே வெங்கமேடு பகுதியில் திமுக மகளிர் அணி அமைப்பாளரை கத்தியை காட்டி மிரட்டிய அதிமுக நகர செயலாளர் தம்பியைக் கைது செய்ய வலியுறுத்தி செந்தில் பாலாஜி மார்ச் 28ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “’கரூர் வடக்கு நகர திமுக மகளிரணி அமைப்பாளர் தனலட்சுமியை கட்சி பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில், அதிமுக வார்டு செயலாளர் நவேஸ்கான் தம்பியான பிரபு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இந்திரா நகர் பகுதியில் உள்ள பெண்களை திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்க ஏன் அழைத்து செல்கிறாய் என தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கத்தியை காட்டி மிரட்டுவதை தனலட்சுமி தனது செல்ஃபோனில் பதிவு செய்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பிரபு தனலட்சுமி வீட்டுக்குள் புகுந்து தாக்க முயற்சித்துள்ளார். அதிமுகவின் இந்த அராஜகப் போக்கு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன்” என்றார்.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இதனிடையே, திமுக நிர்வாகி தனலட்சுமி வெங்கமேடு காவல் நிலையத்தில் வீடியோவை ஆதாரமாக கொடுத்து, அதிமுக நிர்வாகி தூண்டுதல் பேரில் நடைபெற்ற மிரட்டல் குறித்து புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கலாசார தாக்குதல் நடத்துகிறது பாஜக' - ஸ்டாலின்