கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், தமிழ்நாடு அரசினுடைய 27 துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பாக அரசு பொருட்காட்சி கரூரில் இன்று தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விரைவில் செய்தியாளர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் -அமைச்சர் உறுதி - கடம்பூர் ராஜூ
கரூர்: செய்தியாளர்களுக்கான நலவாரியம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் 192 பயனாளிகளுக்கு ரூ. 1.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழ்நாடு அரசின் 27துறைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பொழுதுபோக்காகக் கருதாமல் அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”, என வேண்டுகோள் விடுத்தார். மேலும், செய்தியாளர்கள் நலவாரியம் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு, நல வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது பணி நிறைவடைந்தவுடன் நல வாரியம் அமைக்கப்படும் எனக் கூறினார்.