கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குள்பட்ட மேட்டு மருதூரில் கி.பி.996இல் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீ உடையநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் கோபுரமானது பத்து அடி உயரத்திற்கு கருங்கற்களாலும், அதன்மேல் உள்ள 20 அடி உயரத்திற்கு செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலினுள் ஆறரை அடி உயரமுள்ள சிவலிங்கமும் உள்ளது. இந்த கோவிலின் வரலாற்றைக் குறிக்கும் வகையில் கல்வெட்டுகள், பழைமை வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. இதில் சிவலிங்கம் மட்டுமல்லாது பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர், விநாயகர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும் உள்ளன.
அதேநேரம், சோழர் காலத்தில் சிவபெருமானுக்கு ஆறு கால பூஜைகள் நடந்ததாகவும், அதற்காக தீர்த்தம் எடுக்க மருதூர் காவிரிக்கரையில் இருந்து பட்டின பிள்ளையார் கோவிலுக்கு சுரங்கப்பாதை வழியாக கோவில் அர்ச்சகர்கள் சென்று வந்ததாகவும் இங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருதூர் பெயர் காரணம்: மேலும், இங்குள்ள சிவபெருமானுக்கு ஆராமுதீஸ்வரர் என்று பெயர். சோழர் காலத்தில் இந்தப் பகுதியில் வேளாளர், பிராமண சமூகத்தினர் உள்ளிட்டோர் வாழ்ந்து வந்துள்ளனர். ராஜராஜசோழன் தனது 11 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தின்போது, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து, கோயிலை நிர்மாணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தப் பகுதி பிரம்ம தேயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு இந்தப் பகுதி தானமாக வழங்கப்பட்டதால், ‘மாதான மருதூர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், காலப் போக்கில் இது மருதூர் என மருவி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் எண்பட்டை வடிவம் கொண்டது. ஆவுடையார் எனக் கூறப்படும் சிவலிங்கத்தின் அடிப் பகுதி, தாமரை இதழ் விரிந்தது போன்ற அமைப்பைக் கொண்டது.
இதற்கு சோழர் காலத்தில் இந்த வகை அமைப்புடைய லிங்கங்களே அதிகம் இருந்ததாக தொல்லியல் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்தக் கோயில் இன்றுவரை பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. மேலும் இந்த கோவிலுக்குச் சொந்தமாக நிலங்களும் இருந்துள்ளன. ஆனால், இந்த நிலங்களின் தற்போதைய நிலை என்னவென்பதே தெரியவில்லை.