தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதியதாக 2 கல் குவாரியா? போராட்டம் வெடிக்கும் - சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் - Opposition to construction

குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பாடி கிராமத்தில் புதிய 2 கல் குவாரிகள் அமைக்கக்கூடாது எனவும் மீறீனால் போராட்டம் வெடிக்கும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 21, 2022, 5:47 PM IST

புதியதாக 2 கல் குவாரியா? போராட்டம் வெடிக்கும் - சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்பு கல்குவாரிகள், கிரானைட் கல் குவாரிகள் இயங்குவதற்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, ஆலம்பாடி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இரண்டு கிரானைட் கல் குவாரிகள் அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக கருத்துக்கேட்பு கூட்டம் ஆர்.வெள்ளோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் இன்று (டிச.20) நடைபெற்றது.

குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பாடி கிராமத்தில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு

கருத்துக்கேட்பு கூட்டம்: ஆலம்பாடி கிராமத்தில் 2020ஆம் ஆண்டு கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர், கிரானைட் குவாரி அமைப்பதற்கு அருகில் இருந்த நீரோடைப் பகுதிகள் எதுவும் இல்லை என வரைபடம் தயாரித்து, தனியார் கல்குவாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரை பணிநீக்கம் செய்வதோடு, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும்; இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய கல் குவாரிகளுக்கு அனுமதிக்கமாட்டோம்:ஏற்கெனவே, கரூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகளும் மற்றும் கல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. அதில், அரசு அறிவித்த வழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பு சுவர்கள் மற்றும் மரக்கன்றுகள் நடுவது, தொழிலாளர்களுக்கான பணிப் பாதுகாப்பு போன்றவைகள் எதுவும் முறையாக கடைபிடிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, அரசு அதிகாரிகள் ஆவணங்களை தவறாக வழங்கி இருப்பதாகவும், தற்போது அமையவிருக்கும் இரண்டு கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தெரிவித்தார்.

காற்றில் பறந்த உறுதிமொழி:இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், 'தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் வரிப்பணத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். ஆனால், குவாரிகளை சுற்றி 'பசுமை அரண்' எனும் விதிமுறையைப் பின்பற்றி சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரங்கள் நட்டு வளர்ப்போம் என உறுதியளித்து அனுமதி பெற்றுவிட்டு, ஒரு குவாரிகள் கூட மரக்கன்றுகளை நடாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

மாவட்ட கனிம வளத்துறைக்கு தூக்கமா?: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ராமகிருஷ்ணா கல்குவாரி நிறுவனத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 'பசுமை அரண்' ஏற்படுத்தாமல் இருந்த குவாரிகளுக்கு 17.09.2022அன்று சீல் வைத்தது போல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முறையாக அனுமதியும் மரக்கன்றுகளும் நடாமல் செயல்படும் குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை வைத்தார்.

குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பாடி கிராமத்தில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு

வறட்சியான ஆறுகள்:மேலும், ’தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அதிக மழைப்பொழிவு இருந்த போதும் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு வறட்சியான பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு (Chettinad Cement Corporation Ltd) சொந்தமான சுண்ணாம்பு கல்குவாரி சட்ட விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இதே நிறுவனம் கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள தேவர்மலை பகுதியில் சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் 'நாணல் வெடிமருந்து' வகைகளைப் பயன்படுத்தாமல், வைக்கப்பட்ட வெடியின் காரணமாக பாறைகள் குடியிருப்புப் பகுதிக்குள் சென்று விழுந்ததால், அப்பகுதி மக்கள் களத்தில் இறங்கி போராடியதால், இரண்டு கல்குவாரிகளுக்கு அளிக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆலைகளின் வளர்ச்சி இயற்கையின் அழிவிலா?:அங்குள்ள மக்கள் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு எதிராக 'பொதுமக்கள் வாழ்வாதார இயக்கம்' என்ற ஒன்றை துவங்கி, மாவட்டம் முழுவதும் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான கல்குவாரிகளில் சட்டவிதிமுறைகளை மீறி மேய்ச்சல் நிலங்களில் உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாக, போராட்டத்தை துவக்கி உள்ளனர். இது தவிர, சுண்ணாம்புக்கல் எடுக்கும்போது, நீர் நிலைகள் முழுமைக்கும் ஆக்கிரமிக்கப்பட்டு, நீர்வழிப் பாதைகள் தடுத்து நிறுத்தப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

கவனம் தேவை:உயர் நீதிமன்றம் தலையிட்டு, நீர்வழிப் பாதைகள் குறித்து பத்து வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ரத்து செய்து, சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்கிறோம்.

போராடவும் பொதுமக்கள் தயார்: இல்லாவிடில் கரூர் மாவட்டத்தில் மக்கள் துவங்கியுள்ள போராட்டம் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பரவும். மக்கள் போராட்டத்தின் மூலம் சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சை கலெக்டர் ஆபிஸ் முன் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு; எம்எல்ஏ கைது

ABOUT THE AUTHOR

...view details