கரூர் மணல் குவாரி: 4வது முறையாக அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கரூர்:கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என மூன்று குவாரிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக மணல் கிடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.
இதனையடுத்து, மூன்றாவது முறையாக அக்டோபர் 18ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள நன்னியூர், புதூர் அரசு மணல் குவாரியில் மூன்று கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்தனர்.
4வது முறையாக சோதனை:இந்நிலையில், நேற்று (அக்-20) நான்காவது முறையாக, வாங்கல் அருகே காவிரி ஆற்றில் மல்லம்பாளையம் முதல் சேனப்பாடி வரை, 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, டிஜிட்டல் சர்வே இயந்திரங்களைக் கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர். பின்னர், சுமார் 3 மணியளவில் திருச்சி நோக்கி சென்றனர்.
மல்லம்பாளையம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வந்ததால், கணபதிபாளையம் அரசு மணல் குவாரி கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே வர முடியாதபடி ஜேசிபி மூலம் மண்ணைத் தோண்டி குவியிலாக குவித்து வைத்ததாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனையில், அரசு மணல் குவாரிகளை செயற்கைக்கோள் மூலம் அளவிடும் பணிகள் நடத்தி உள்ளதாகவும், தற்பொழுது டிஜிட்டல் சர்வே முறையில் அதனை உறுதி செய்யும் வகையில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அரசு மணல் குவாரிகளில் பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை அரசு மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்பான அறிக்கையை மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே போதிய ஆதாரங்களைத் திரட்ட அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் முதல் லியோ போலி டிக்கெட் வரை சென்னையின் முக்கிய குற்றச் செய்திகள்!