கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அந்தந்த வேட்பாளர்கள் தங்களது கட்சியின் சார்பாக தற்காலிக கொட்டகை அமைத்து வாக்காளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்துவருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் முறையாக அனுமதியும் வழங்கியுள்ளது.
'ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறை!' - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி
கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
இதனிடையே, திமுக தரப்பில் அமைத்திருந்த கொட்டகையை திருச்சி சரக காவல்துறை தலைவர் லலிதா லட்சுமி கொட்டகையை பிரிக்குமாறு திமுகவினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தளவாய் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமியிடம் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது செந்தில் பாலாஜியுடன் திமுக தொண்டர்கள் திரண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர், தொண்டர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்ல மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடி மையங்களில் மக்களிடம் வாக்கு சேகரிக்கின்றனர். இதற்கு காவல் துறை துணை போகிறது. இது குறித்து உயர் அலுவலர்களிடம் நான் முறையிடப் போகிறேன்' என்று அவர் தெரிவித்தார்.