கரூர் மாவட்டம் கே. பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில் திமுக சார்பில் குளத்தை தூர்வாரும் பணி அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் உரிய அனுமதி பெற்று நேற்று இரவோடு இரவாக அதிமுக சார்பில் குளம் தூர்வாரப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குளத்தை தூர்வாரும் பணி மூன்று இடங்களில் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று நெடுங்கூர் பகுதியில் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்றிருக்கிறது.
அதிமுக சார்பில் எத்தனை குளங்கள் தூர்வாரப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நாங்கள் தூர்வார இருக்கின்ற குளத்திற்கு இளைஞர்கள் வருகிறார்கள். அதுமட்டுமின்றி, செப்டம்பர் 14ஆம் தேதி திமுக இளைஞரணியில் இளைஞர்கள் இணைய இருக்கிறார்கள். அன்றைய தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் திமுக இளைஞரணியில் இணைந்துகொள்ளலாம்” என்றார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு இதற்கிடையே, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலின்போது, மூன்று சென்ட் இடம் வழங்கப்படும் என செந்தில் பாலாஜி அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாததால், “மூன்று சென்ட் நிலம் எங்கே” என்று பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.