தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறந்த செருப்புகள்: கரூரில் அதிமுக - திமுக மோதல்! - dmk admk clash in vice chairman election

கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலின் போது, அதிமுக - திமுக இடையே செருப்பு வீச்சு மற்றும் மோதல் ஏற்பட்டது.

அதிமுக - திமுக மோதல்!
அதிமுக - திமுக மோதல்!

By

Published : Dec 19, 2022, 7:36 PM IST

அதிமுக - திமுக மோதல்!

கரூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில், கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருக்கான மறைமுகத்தேர்தல் இன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.

ஏற்கெனவே போதிய உறுப்பினர் வருகை இல்லாத காரணத்தினால், ஐந்து முறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதையடுத்து, கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலை டிசம்பர் 19ஆம் தேதி நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது. அதன்படி, இன்று தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட இருந்த திருவிக கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட இருந்த திருவிக ஆகியோர் காரில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருவிக-வை கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கரூர் மாவட்ட எஸ்.பி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியரிடம், திருவிக கடத்தப்பட்டதாக அவரது மகனும் கரூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் அதிக அளவில் கூடினர்.

பின்னர் திமுகவைச் சேர்ந்த கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சென்றபோது, அங்கு கூடியிருந்த அதிமுகவினர், திமுகவினரை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அதிமுக கரூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றபோது, திமுக - அதிமுகவுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த தள்ளுமுள்ளுவில் அதிமுக - திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயற்சித்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது, கூட்டத்தில் திமுக - அதிமுக தொண்டர்களுக்கு இடையே செருப்பு வீச்சு நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவராக இருந்த முத்துக்குமார் என்பவரை திமுகவினர் தாக்க முற்பட்டபோது, இரு தரப்புக்கு இடையே மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவர்த்தனம், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொண்ட இளம்பெண் பலி; கடைக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details