கரூர்: தீபாவளிப் பண்டிகை நாளை (நவ.4) கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லத்தரசிகள் இனிப்பு வகைகளை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
மறுபுறம் கடை வீதிகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, புதிய ஆடைகள் வாங்குவதற்கு குடும்பத்துடன் மக்கள் குவிந்து வருகின்றனர்.
அண்மைக்காலத்தில் தீபாவளிப் பண்டிகையின்போது பேக்கரி கடைகளில் விற்கப்படும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி வந்தனர். தற்பொழுது அவர்கள் கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் முறுக்கு, அதிரசம் உள்ளிட்டப் பலகார வகைகளை வாங்கி, தீபாவளியைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
நான்கு தலைமுறையாக விற்பனை
கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள வெள்ளியணை கிராமத்தில், நான்கு தலைமுறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தயாரிக்கும் அதிரசம், வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தீபாவளிப் பண்டிகையின்போது அனுப்பிவைக்கப்படுகிறது.
இது குறித்து அதிரசம் தயாரிக்கும் குடும்பத்தைச் சார்ந்த தியாகராஜன் கூறியதாவது, "எங்களது குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறையைக் கடந்து இப்பகுதியில் அதிரசம் உள்ளிட்டப் பலகாரங்களைத் தயாரித்து வீட்டிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
அதிரசத்தை ருசி பார்க்கத் தவறுவதில்லை
கரூர் - திண்டுக்கல் சாலை வழியாகப் பயணிப்போர் வெள்ளியணை அதிரசத்தை ருசி பார்க்கத் தவறுவதில்லை. இதனால் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
இப்பொழுது தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நாளொன்றுக்கு சுமார் 5,000 அதிரச பாக்கெட்கள் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. நாங்கள் தயாரிக்கும் அதிரசத்தின் தனிச்சிறப்பு பச்சரிசியைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, அதை பாரம்பரிய முறைப்படி தயார் செய்து வரை பிரத்யேகமாக இருப்பதுவே.
உலகம் முழுவதும் விற்பனை
கரூர் - வெள்ளியணை அதிரசம் தீபாவளி காலமென்பதால் வெளியூர்களுக்குச் செல்லும் விருந்தினர்கள் வெள்ளியணை அதிரசத்தை வாங்கிச் செல்கின்றனர். ஆஸ்திரேலியா, கனடா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு அவரது உறவினர்கள் எங்களது அதிரசத்தை வாங்கி பார்சல் மூலம் அனுப்பி வைக்கின்றார்கள்.
இத்தொழிலினை தொடர்ந்து பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வெள்ளியணை அதிரசத்திற்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.
ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பு வகை
இதுகுறித்து அதிரச தயாரிப்பில் ஈடுபடும் அங்குசாமி கூறியதாவது, "எனது தந்தையுடன் சேர்ந்து அதிரசம் தயாரித்து வருகிறேன். என்னோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். தற்பொழுது 4 பேர் ஒரே குடும்பமாக இத்தொழிலை செய்து வருகிறோம்.
எனது மகன் தியாகராஜன் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் பாரம்பரிய இனிப்பு வகை தயாரிக்கும் தொழிலை விரும்பி செய்கிறான்" என்றார்.
எலும்பு வலுப்பெற தேவைப்படும் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பு வகையாக அதிரசத்தைப் பல்வேறு பகுதியிலிருந்து வந்து, பொதுமக்கள் வாங்கி செல்வதால், கரூர் மாவட்டத்திற்கு வெள்ளியணை அதிரசம் ஒரு தனிச் சிறப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ரசாயனம் இன்றி விவசாயம் செய்து அசத்தும் இயற்கை விவசாயி!