தொழிலாளா் நலத்துறை துணை ஆய்வாளர் கைது கரூர்:வெண்ணமலையில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் நலத்துறை துணை ஆய்வாளரை, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூா் மாவட்டம், வெண்ணமலையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவா் தங்கையன் (வயது 57). இவா், கரூா் மாவட்டத்தில் செயல்படும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள ஊழியா்களின் ஊதியம் மற்றும் அவா்களுக்கான நலவாரிய சலுகைகள் தொடா்பான ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், கரூர் மாவட்டம், கடவூர் அருகில் தரகம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் மையத்தில், தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையன் ஆய்வு செய்த போது அங்குள்ள தொழிலாளர்களுக்கு, தொழிலாளா் நலச்சட்டத்தின் படி, முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளருக்கு அபராதமாக 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் என்றும், நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க தனக்கு 40 ஆயிரம் ரூபாய் அளிக்குமாறும் தரகம்பட்டி பெட்ரோல் மையத்தின் உரிமையாளர் முத்துவிடம் அவர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதாகவும் அதற்கு சம்மதம் தெரிவித்த தங்கையன் அங்கிருந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத பெட்ரோல் மையத்தின் உரிமையாளர், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், கரூா் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளா் நடராஜன் தலைமையிலான போலீசார், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரிடம் ரசாயன பவுடா் தடவிய 25 ஆயிரம் ரூபாவை கொடுத்து தொழிலாளா் நலத்துறை துணை ஆய்வாளா் தங்கையனிடம் கொடுக்குமாறு கூறினா்.
அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மையத்தின் உரிமையாளர் பணத்தை தங்கையனிடம் கொடுத்தார். இந்நிலையில், லஞ்சப் பணத்தை பெற்று காரில் உள்ளே அமர்ந்து கொண்டிருந்த தங்கையனை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் எம்.நடராஜன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், கரூர் மாவட்டத்தில், கடந்த ஆறு மாதத்தில் 18 பெட்ரோல் மையங்களில் ஆய்வு நடத்திய கரூர் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கையன், பலரையும் வழக்கு பதிவதாக மிரட்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் உள்ள தங்கையன் அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, தங்கையனை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவி மீது தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் கைது! சிசிடிவி காட்சி!