மொழிப்போர் தியாகிகள் கூட்டம்; கரூரில் அதிமுகவினருக்கு அனுமதி மறுப்பு கரூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம் (Tamil War Martyrs Memorial Day) இன்று (ஜன.25) அதிமுக, திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டன. குறிப்பாக, திராவிட கட்சிகள் ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் அதிமுக திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிமுக கரூரில் உள்ள 80 அடி சாலையில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர் இதற்காக இன்று மாலை 6 மணி அளவில் அதிமுகவினர் மொழிப்போர் தியாகிகளுக்கான கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே, அதிமுக சார்பில் அனுமதியின் பெயரில் கரூரில் மேடை அமைக்கும் பணி நடைபெற்றதாகவும் காவல்துறையினர் அங்கு சென்று கூட்டம், நடத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால், மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களிடம் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் சென்று, கூட்டம் நடத்த 5 மணி நேரமே உள்ள நிலையில் திடீரென ரத்து செய்வது நியாயமா? என கேட்டு முறையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துவிட்டு திடீரென அனுமதி மறுப்பதின் நோக்கம் என்ன? திமுகவுக்கு அனுமதி அளித்துவிட்டு அதிமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், காவல்துறையினர் இதுகுறித்து முறையாகப் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும், மேலும் நாளை அதே இடத்தில் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் மீண்டும் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, திமுக சார்பில் கரூர் நகர் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே வீரர்களுக்கு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது தவிர, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ இளங்கோ தலைமையில் வேலாயுதம்பாளையம் மலை வீதி பகுதியிலும், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் கிருஷ்ணராயபுரம் கடைவீதி பகுதிகளிலும், குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இதனால், இன்று அதிமுக சார்பில் கரூர் 80 அடி சாலையில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க கூட்டம் கூட்டம் கடைசி நேரத்தில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:"ஈரோடு இடைத்தேர்தலில் நாங்க தான் ஜெயிக்கிறோம்.." - அமைச்சர் கே.என்.நேரு