தமிழ்நாடு முழுவதும் வாழுகின்ற ஊராளி கவுண்டர்களை டிஎன்சியில் சேர்க்க வேண்டும் கரூர்:தமிழ்நாடு முழுவதும் வாழுகின்ற ஊராளி கவுண்டர்களை பிசி, டிஎன்டி, டிஎன்சி என்ற வேறுபாடு இல்லாமல் டிஎன்சி சீர்மரபினர் பட்டியலில் சேர்த்து ஜாதி சான்று வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊராளி கவுண்டர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தின் 15 வது மாநில பொதுக்குழு கூட்டமானது தரகம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவம்பர் 5) முன்னாள் மாநிலத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் புதிய மாநில தலைவராக எஸ்.லட்சுமணன், மாநில பொதுச்செயலாளராக வி.மாரிமுத்து, மாநில பொருளாளராக பி.பாலமுருகன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வாழுகின்ற ஊராளி கவுண்டர்களை பிசி, டிஎன்டி, டிஎன்சி என்ற வேறுபாடு இல்லாமல் டிஎன்சி சீர்மரபினர் பட்டியலில் சேர்த்து ஜாதி சான்று வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியது.
சுதந்திரப் போராட்ட வீரரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடசேரி பொன்னம்பல கவுண்டருக்கு அரசு சார்பில் சிலை வைத்து அவரது பிறந்த நாளை அரசு விழாவாக முன்னெடுப்பது. காவேரி ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரியில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்வது.
கடவூர் தோகமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு விவசாய கல்லூரியை தோகமலை கடவூர் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடரந்து தமிழ்நாடு ஊராளி கவுண்டர்கள் சங்கத்தில் நான்கு முறை மாநில தலைவராக பதவி வகித்த முன்னாள் மாநிலத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன், ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராளி கவுண்டர் சமூகத்தினை முன்னர் இருந்த பிரிட்டிஷ் சமூகத்தினர் ஒதுக்கப்பட்ட பி.சி பட்டியலில் வைத்திருந்தனர்.
பின்னர், முதல் முறையாக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டபோது ஊராளி கவுண்டர் சமூகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று டிஎன்சி (Denotified Communities) பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிட்டார்.
இதையும் படிங்க: "எம்.ஜி.ஆர்.க்கு நடந்தது தான் பாஜகவுக்கு நடக்கிறது.. திமுக போன்ற பேடிகளுக்கு பயப்படக் கூடாது" - அண்ணாமலை!
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது வசித்த மக்கள் தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும், திருச்சி மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும், கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும் பிளவு பட்டு வசித்து வருகிறோம்.
இதனால் எங்களது பிறப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜாதி சான்றிதழ் வழங்குவதில் மூன்று மாவட்டங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. தமிழகம் முழுவதும் ஜாதி சான்றிதழ் டிஎன்சி (Denotified Communities) வழங்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. தமிழக அரசு கோரிக்கையை ஏற்று விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரை சந்தித்து முறையிட இருக்கின்றோம்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று கேட்டதற்கு, “தேர்தல் சம்பந்தமாக எப்பொழுதும் சங்கம் ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுப்பதில்லை மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் விரும்பியவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு” என் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “கடவூர் தோகமலை உள்ளிட்ட பகுதிகளில் நீரேற்று பாசன வசதி மூலம் விவசாயம் மீண்டும் செழிப்பு பெற பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் உறுதி அளித்தனர்.
செம்பரம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஏரியாக உள்ள பஞ்சப்பட்டி ஏரி. வெள்ள காலங்களில் காவேரி ஆற்றில் செல்லும் உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கையை முன் வைக்கிறோம். அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கூறினாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடவூர் தோகமலை பகுதி வறட்சி காரணமாக ஒவ்வொருவரும் குடிபெயர்ந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. கல்வியில் பின்தங்கிய பகுதியாகவும், படிப்பின் தரம் உயர்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இதே போல கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு வேளாண்மை கல்லூரியை நீர் ஆதாரங்கள் உள்ள பகுதியில் அமைத்து வளர்ச்சி அடைய செய்வதை அரசு விரும்புகிறது. ஆனால் வறட்சி அடைந்த பகுதிகளை மீட்க, அரசு வேளாண்மை கல்லூரியை தோகைமலை கடவூர் பகுதிகளில் அமைத்தால் ஆராய்ச்சி சார்ந்த வேளாண் படிப்புகள் மூலம் அரசு வேளாண்மை கல்லூரி இப்பகுதியில் இயங்கினால், வளர்ச்சி பெறும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள் எப்படி இருக்கும் என தெரியாதா...?" - சீமான்!