கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை உள்பட எட்டு அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனுமதி பெற்ற ஆறு தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தன. முதலில் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டது.
அப்போது பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்துவதாகக்கூட குற்றச்சாட்டினர்.
தற்போது கரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கி அதன் தாக்கம் வேகமாக இருப்பதால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர். ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தற்போது இருப்பில் இல்லாததால் அரசு மற்றும் தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் போடும் பணி நேற்று(ஏப்.19) நடைபெறவில்லை. இதனால் ஊசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இது குறித்து சமூக செயற்பாட்டாளர் முல்லையரசு ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மக்களுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை பயன்படுத்தி அரசு அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தடுப்பூசி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே விரைந்து கரூர் மாவட்டத்தில் மீண்டும் தடுப்பூசி முகாம் தொடங்க வேண்டும், இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியதாவது, கடந்த ஜன 17ம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 47,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3.5 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களில் 8 விழுக்காடு பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரே நேரத்தில் அதிகம் பேர் வருகின்றனர். கூடுதலாக 500 டோஸ்கள் வர இருக்கின்றன. தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங். எம்பி ராகுலுக்கு கரோனா!