தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாஜகவுக்கு பணியாற்றிய கருப்பு ஆடுதான் அண்ணாமலை” - காட்டமாக விமர்சித்த ஜோதிமணி எம்பி!

Congress MP Jothimani Byte: கர்நாடகாவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்த பாஜகவுக்காக பணியாற்றிய கருப்பு ஆடுதான் அண்ணாமலை என்று கரூர் எம்.பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

பேட்டி அளித்த கரூர் எம்.பி ஜோதிமணி
பேட்டி அளித்த கரூர் எம்.பி ஜோதிமணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 11:54 AM IST

பேட்டி அளித்த கரூர் எம்.பி ஜோதிமணி

கரூர்:பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூரில் நடைபெற்ற, என் மண் என் மக்கள் யாத்திரை பிரசாரத்தில், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி ஜோதிமணி, மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மக்களைச் சந்தித்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா?” என அண்ணாமலை பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜோதிமணி, “பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அண்ணாமலை நடத்தும் யாத்திரை கரூரில் தோல்வி அடைந்துள்ளது. அண்ணாமலையின் யாத்திரை ஒரு வசூல் யாத்திரை” என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை, “கரூர் எம்பி ஜோதிமணி பெண் என்பதால் விட்டு வைக்கிறேன், பிழைத்துப் போகட்டும்” என்றார்.

தமிழகத்தின் வசூல் ராஜா அண்ணாமலை:இவ்வாறாக இருவருக்கும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சை எதிர்க்கும் வகையில், ஜோதிமணி கரூரிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று மாலை ஒரு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக தலைவர் அண்ணாமலை பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் என்று என்னை கூறுகிறார். அண்ணாமலை தமிழகத்தில் வசூல் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் வசூல் செய்த பணத்தை வைத்துக் கொண்டு திமிராக பேசி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி செய்கிறது என்ற ஆணவத்தில்தான் அண்ணாமலை இப்படி பேசி வருகிறார். பாஜக நரேந்திர மோடி, அண்ணாமலை ஆகியோருக்கு அமலாக்கத்துறை வேட்டை நாயாக செயல்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் உள்ள எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவி விடுகின்றனர்.

25 வருட கடின உழைப்பு:தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு அமலாக்கத் துறையை அனுப்பட்டும். அங்கே கஞ்சி போட்ட காட்டன் சேலைகளை தவிர வேறு எதுவும் கிடைக்காது. பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையைப் போன்று அரசியலில் நேற்று முளைத்த காளான் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, பொதுமக்களுக்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் 25 ஆண்டுகள் கடினமாக உழைத்ததால் மக்கள் மனதிலும், அரசியலில் நேர்மையான பெண்ணாக இருக்கிறேன்.

ஒரே ஆண்டில் தலைவர் பதவி: ஆணாதிக்க சிந்தனை கொண்ட அண்ணாமலைப் போல, பெண் அரசியல்வாதிகள் மீது தனி நபர் தாக்குதல் நடத்தும், தூய்மையற்ற அரசியல்வாதி நான் இல்லை. கர்நாடகாவில் குறுக்கு வழியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க அண்ணாமலை பணியாற்றி வந்தார். மூன்று நாட்கள் மட்டுமே நீடித்த எடியூரப்பா ஆட்சி கலைந்து, மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமைந்ததால், வேறு வழியின்றி ஐ.பி.எஸ் அதிகாரி பணியை அண்ணாமலை ராஜினாமா செய்தார்.

காவல்துறை விசுவாசமாக இல்லாமல் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்த பாஜகவுக்கு பணியாற்றிய கருப்பு ஆடுதான் அண்ணாமலை. கர்நாடகாவில் பாஜகவுக்கு வேலை செய்து, ஊழல்வாதியாகவும் இருந்த அண்ணாமலை, நேர்மையான காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதாக தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத நிலையில், பாஜகவில் இணைந்த ஒரே ஆண்டில் தமிழகத்தின் மாநிலத் தலைவர் பதவி.

அண்ணாமலைக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு?அண்ணாமலை எந்த அரசியல் பின்புலமும் கொண்டவர் அல்ல. மக்கள் பிரதிநிதியாகவும் இல்லை. அவருக்கு எதுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு? ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் அளவில் மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி வருகிறார். கரூர் மக்களவைத் தொகுதி மக்களுக்கு தான் செய்த பணியைக் கூறி மக்களிடம் நிச்சயம் வாக்கு கேட்பேன். அண்ணாமலையின் மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். ஆட்சி மாறும்போது, அவரது ஊழல் வெளிச்சத்துக்கு வரும்” என ஜோதிமணி கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் 3 இடங்களில் என்ஐஏ சோதனை.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details