கரூர் : வெங்கமேடு திட்டசாலை பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா பர்வீன் உள்ளிட்ட 9 பேர் காந்தி கிராமம் அருகே உள்ள ராமனூர் கே.வி.பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் சேமிப்பாக தொகை செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் லாபத் தொகை வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி 9 நபர்களிடம் இருந்து 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், சிலர் அந்நிறுவனத்தை நம்பி தங்களது சேமிப்பு பணத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது. சில மாதங்கள் சரியாக தொகையினை வழங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தொகை நிறுத்தப்பட்டதால் சந்தேகம் அடைந்தவர்கள் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்நிறுவனத்தை நடத்தி வந்த கரூர் வடக்கு காந்திகிராமம் பிருந்தாவன் பள்ளி அருகே வசித்து வரும் விஷ்ணுபிரியா மற்றும் அவரது கணவர் வேலாயுதம், விஷ்ணுபிரியாவின் மாமனார் மாமியார் குமாரசாமி, ராமேஸ்வரி ஆகியோர் மீது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, இரு தரப்பினரும் அழைத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் நேற்று (டிச. 1) விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்ட நிதி நிறுவனத்தினர் வெளியே சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.