கரூர்:மண்மங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாங்காசோளிபாளையம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராக கருமணன் என்பவர் செயல்படுகிறார். அங்கு, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக, தலைவரின் உறவினர் சதிஷ்குமார் பணியாற்றி வருகின்றார்.
இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை பயிர் கடன், தனிநபர் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் ஆயிரத்து 275 பேர் உறுப்பினராக உள்ளனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது.
சங்கத்தில் திமுகவினர் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக திமுகவினரை தவிர்த்து மற்றவர்களின் கணக்குகளில் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், கடன் வாங்கிய விவசாயிகள் பயிர்க்கடனை திருப்பி செலுத்தியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்கிய சதிஷ்குமார் அதற்குரிய ரசீதை வழங்கவில்லை.
கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு
மேலும், பயிர் கடன், பயிர் நகை கடன் வாங்கியவர்களின் கடன்களை நகைக் கடனுக்கு தன்னிச்சையாக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் மாற்றியுள்ளனர். இதனால், தமிழ்நாடு அரசு அறிவித்த அந்த தள்ளுபடி விவசாயிகளுக்கு கிடைக்காமல் இவர்கள் இடையில் புகுந்து சதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக கூட்டுறவு துறை உயர் அலுவலர்களுக்கு அளித்த புகாரின் பேரில் ஜூலை 30ஆம் தேதி மாங்காசோளிபாளையத்தில் செயல்படும் கூட்டுறவு கடன் சங்கத்தில் தான்தோன்றிமலை கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் முதல்கட்டமாக பயிர் கடன் பெற்ற விவசாயிகள் கணக்கில் 9 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதும், தனிநபர் நகைக்கடன் வரவு செலவில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சதிஷ்குமாரிடம் கேட்டபோது, தான் அந்த பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், ஒரு மாதத்திற்குள் இந்த பணத்தை திருப்பி செலுத்துவதாகவும் தெரிவித்து, ஒரு கடிதத்தில் மோசடி செய்த விவரங்களை எழுதி கையொப்பம் செய்து கொடுத்ததுடன், உறுப்பினர்கள் முன்பு வாக்குமூலமும் அளித்தார்.
கூட்டுறவு சங்க அலுவலகம் முற்றுகை