தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையும் நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே இறுதிகட்ட பரப்புரை செய்ய திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் இருகட்சினருக்கும் ஒரே நேரத்தில் அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அதை மேற்கோள்காட்டி இறுதிகட்ட பரப்புரை செய்ய தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன்.
இந்த உத்தரவையடுத்து துணை ராணுவப்படையினர், காவல் துறையினர் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பேருந்துகளுக்கு மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மத்திய மண்டல காவல் ஐ.ஜி. வரதராஜன், சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.